தென்காசி: குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வார்டுகளில் திமுக 4 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 4ஆம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 28) குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரும் (கலால்) துணை ஆணையருமான ராஜமனோகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை ஆட்சியர் ஷீலா ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர்.
ஆனால் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர். திமுக உறுப்பினர்கள் இம்முறையும் புறக்கணிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து 10.05 மணிக்கு தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1 ரூபாய் நாணயங்கள் கொடுத்து ரூ.2.6 லட்சம் பைக் வாங்கிய இளைஞர்!