கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது சில தளர்வுகள் உடன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக எந்தவித தொழில்களும் செய்ய முடியாமல் இயல்புநிலை பாதிப்பு அடைந்துள்ளதால், பல்வேறு தரப்பினரும் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலுள்ள சமையல் கலைஞர்கள் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த அவர்கள் கூறுகையில், “இந்த ஊரடங்கு காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக முன்பனம் வாங்கி இருந்தோம். ஆனால் எந்த நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடைபெறாததால் அனைத்தும் ரத்தாகி விட்டன.
இதனால் முன்பணத்துடன் வரவிருந்த வருமானமும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய நிவாரணம் அளித்து உதவ வேண்டும்” எனத் தெரிவித்தனர்.