தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல், மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஹசீனா பேகம் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிகர்கள், அரசியல் கட்சியினர், சமூகநல அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தென்காசி நகரை அழகுபடுத்த பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தென்காசி நகரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் வைப்பது, பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் விளம்பரங்கள் மேற்கொள்ள தென்காசி கொடிமர திடல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில் இடம் ஒதுக்கப்படும் எனவும், அந்த இடங்களில் விளம்பரபடுத்திக் கொள்ளலாம் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதற்கு வணிகர்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.