தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இங்கு பருவமழை காரணமாக நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தோடிவருகிறது.
இருப்பினும் அப்பகுதியில் இருக்கும் சுற்றுவட்டார மக்கள், சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில், அணையில் கரோனா தடை உத்தரவை மீறி குளிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் குண்டாறு அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியாகியும், தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வார இறுதி என்பதால் குண்டாறு அணையில் பொதுமக்கள், இளைஞர்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று ஆபத்தை உணராமல் நீர்த்தேக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று செல்பி எடுத்து குளித்து விளையாட தொடங்கிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அணையின் மேற்பகுதிக்கு மக்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.