தென்காசி: தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று(டிச.11) தென்காசியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போன் பேசியபடி, அதிவேகமாக பேருந்தை இயக்கியுள்ளார். இதனை மற்றொரு பேருந்தில் சென்ற பயணி ஒருவர், வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது’ என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இதனையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த அரசுப் பேருந்து, தென்காசி போக்குவரத்து பணிமனையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், பேருந்தை இயக்கியவர் சுப்பையா பாண்டியன் என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக் கழக மேலாளர், ஓட்டுநர் சுப்பையா பாண்டியனுக்கு மெமோ கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஓட்டுநர் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம்: கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்