தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (39). இவரை கடந்த 2016ஆம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்து, அவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடையநல்லூர் - மதுரை சாலையில், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள குளத்துக் கரையில் வீசிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆறு வருடங்கள் கடந்தும், விசாரணையில் கொலையாளி யார் என்பது குறித்த எந்த துப்பு கிடைக்காமல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை அருகே ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
அதன்பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், சொத்து தகராறு காரணமாக கருப்பையா கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கருப்பையாவின் அண்ணன் வெள்ளத்துரை (49) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணையில், கருப்பையாவை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியதை வெள்ளத்துரை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், சொத்து பிரச்னையில் அடிக்கடி தகராறு செய்ததால் கருப்பையாவை கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, வெள்ளத்துரையை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் குடிப்பதற்கு மது தரமறுத்த நண்பரை கட்டையால் தாக்கிய நபர் கைது!