தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த நல்லூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் விளையாட்டு விழா இன்று ( ஏப்.13 ) நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவரை கல்லூரி நிர்வாகத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பு விருந்தினர் விஜய் வசந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் அவர் பேசுகையில், “இப்போது மாணவர்கள் மொபைலில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
மாணவர்கள் விளையாட்டிற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். தற்போது சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்தாமல் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும்” என்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , “ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இதை எதிர்கொள்ள முடியாத பாஜக அரசு, திட்டமிட்டு அவரது பதவியைப் பறித்துள்ளது. பாஜக ஆட்சியில் ஜனநாயக நாடு சர்வாதிகார நாடாக மாறி வருகிறது.
இதையும் படிங்க: மண்பாண்டம் தயாரிப்பிற்கான மண் எடுக்க விரைவில் எளிய முறையில் அனுமதி - அமைச்சர் துரைமுருகன்
விலை வாசி உயர்வு, விவசாய பிரச்னை பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்தார். அதைத் தடுக்க இவ்வளவு அவசரமாக அவரை நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்துள்ளனர். இது எங்கள் கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். எல்லோரும் ஒன்றிணைந்து பாஜக அரசை அகற்ற வேண்டும் என மக்களும் நினைக்கிறார்கள்.
எனவே, நிதிஷ் குமாரின் முயற்சி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். ராகுல் காந்தி மீது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு வெற்றி படிக்கட்டாக அமையும். அம்பாசமுத்திரப் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பற்களை காவல் அதிகாரி கொடூரமாக பிடுங்கியதாக கூறப்படுகிறது. அது போன்று நடந்திருந்தால் அச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் கல்லூரி முதல்வர் வில்சன், செயலாளர் ஜேசு ஜெகன் உள்பட பேராசிரியர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது? - சட்டப்பேரவையில் கடும் விவாதம்