தீபாவளி பண்டிகை வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் ரயில் போக்குவரத்து வழியாக பயணிக்கின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மதுரை மண்டல ஆணையர் அன்பரசு உத்தரவின் பேரில், செங்கோட்டை ரயில்வே உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நாட்டுப்புற இசை வாயிலாக பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கைகளை சுத்தமாகக் கழுவுவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பெண்கள் பாதுகாப்பாக பயணிப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் ரயில் பயணத்தின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு கொண்டு செல்லக்கூடாது. இதனால் பெரும் அளவு தீ விபத்து நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் கட்டுப்பாட்டுகளை மீறி எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.