மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதே போல் தென்காசி மாவட்டத்திலும் விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிஎஸ்என்எல் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.