கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தள்ளுவண்டிகளிலும், சாலையோரங்களிலும் ஏராளமான வியாபாரிகள் அகல் விளக்குகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து தென்காசியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகைகள், “தென்காசி மாவட்டத்தில் தேன்பொத்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அகல் விளக்குகளை வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறோம். சாதாரண விளக்குகள் 10 ரூபாய்க்கு நான்கு என விற்பனை செய்யப்படுகிறது. டிசைன் போட்ட விளக்குகள் ஒன்று 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் இயந்திரங்களால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டவை. விநாயகர் விளக்கு 250 ரூபாய்க்கும், லட்சுமி முகத்துடன் கூடிய விளக்கு 300 ரூபாய்க்கும், பாவை விளக்கு 80 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக ஒரு நாள் மட்டும் விளக்கேற்ற சாதாரண விளக்குகளை மக்கள் வாங்கிச் செல்கின்றன. பல்வேறு வடிவங்களில் டிசைன் செய்யப்பட்ட விளக்குகளை வீட்டு பூஜையறையில் விளக்கேற்ற வாங்கிச் செல்கின்றனர். நீண்ட காலத்துக்கு இவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் சிலர் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: பிரம்ம ரிஷி மலையில் தீபத் திருவிழா - பொதுமக்களுக்கு அனுமதி ரத்து