தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் அதே பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வார்டு எண் 17-க்கான பெண் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்றுள்ளார். அப்போது,அவருடன் வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிடுவது போன்று ஒருவர் வந்து அந்தப் பெண் வாக்கு செலுத்த முயன்றபோது, அந்த வாக்கை செலுத்திவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, அந்த நபரைக் கண்டுபிடிக்கக் கூறியும் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரியும் அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி மையம் முன்பு போராட்டம் நடத்தியதால் அங்குப் பரபரப்பு நிலவியது.
உடனடியாக, வாக்குச்சாவடிக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரியா அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரிடம் புகார் அளிக்கும்படி கூறி, பின்னர் பெண் அளித்த புகார் மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் அனைத்தும் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
மேலும், இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த வாக்குச்சாவடி மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதாகவும், அதனைச் சோதனை செய்த பின்னர் நடந்தது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுக செயலாளரிடம் காவல்துறை விசாரணை!