தென்காசி: தென்காசி மாவட்டம் நடு பல்க் அருகில் உள்ள பஜார் வீதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் உடைக்கப்பட்டு, கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தென்காசி குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவலர்கள், சிசிடிவி கேமரா உதவியின் மூலம் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சிசிடிவி காட்சியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வந்து, ஏடிஎம் இயந்திரத்தை பல வழிகளில் உடைக்க முயற்சி செய்துள்ளார். மேலும், தன் உடலை வைத்து உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாமல், திணறி சோர்ந்து போன அந்த நபர், ஏடிஎம் இயந்திரத்தை திட்டியபடி வெளியேறி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், பணத்திற்காக இந்த ஏடிஎம்மை நோட்டமிட்டு வந்ததாகவும், அதற்காக அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து, ஏடிஎம்-ஐ கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
தற்போது தென்காசி நகர் பகுதியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவத்தில், உடனடியாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினருக்கு, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.