தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேர்ந்தமரத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை வழியாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தியபோது லாரியின் ஓட்டுனர் லாரியை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பிடிக்கப்பட்ட லாரியை சோதனை செய்ததில் சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி 300 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட இருந்ததும், லாரியின் உரிமையாளர் காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்த பாண்டித்துரை என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.