தென்காசி: கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு பகுதியாக “மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி” அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடையநல்லூர் பகுதி மட்டுமல்லாமல் சேர்ந்தமரம், வீரசிகமணி, வலசை, இடைகால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினரின் குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநரின் மகளாக சப்ரீன் என்ற மாணவி பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை சில வினாடிக்குள் கூறி அசத்தியுள்ளார். மேலும், இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனிம அட்டவணையில் இருக்கும் தனிமங்களின் பெயர்களை ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி கூறுகையில்,“ நான் கடந்த ஒரு வருடமாக நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை ஆசிரியரின் உதவியோடு, பயிற்சி பெற்று வந்துள்ளேன். மேலும், உலக சாதனையாக 17.4 விநாடிகளில் தனிமங்களின் பெயர்களைக் கூறியுள்ளனர். அதை முறியடிக்கும் விதமாக நான் 13 விநாடிக்கு முன்னரே கூறியுள்ளேன் எனவும், நான் உலக சாதனை புரிய எனக்கு மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் தகுந்த வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், “தங்களது பள்ளியில் ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர் எனவும், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கும் எனவும், அதை வெளிக்கொணரப் பள்ளி நிர்வாகம் சார்பில் பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், மாணவி சப்ரீனின் திறமையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது எனவும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதில் தற்போது மாணவர்களிடையே அதிகமாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இந்த மாணவியின் சாதனையைப் பார்த்து சக மாணவர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி நிர்வாகமும், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி முதலமைச்சருக்கு இல்லை - அண்ணாமலை சாடல்!