11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - சிக்கிய கடிதத்தில் இருந்தது என்ன? - puliyankudi news
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதன் சுற்று வட்டார கிராமங்கள் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 18) இப்பள்ளியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் மாணவி. இவரது தந்தை, மாணவிக்கு இரண்டு வயதாக இருக்கும் நிலையில் உயிரிழந்துள்ளார். எனவே, தாய் மட்டுமே கூலி வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். இதனிடையே, மாணவி அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் மிகவும் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், புளியங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவியின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விசாரணையில் பள்ளியில் மாணவியை உதவி தலைமை ஆசிரியை சக மாணவிகள் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், தன்னை வகுப்பில் அனைவரின் மத்தியில் ஆசிரியை திட்டியதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொருட்காட்சி சென்றபோது ஆசிரியர் தன்னை தனிப்பட்ட முறையில் திட்டியதால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என கடிதத்தில் எழுதி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இந்த சம்பவம் குறித்து மாணவியின் உறவினர்கள் பேட்டி அளித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளியில் காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Coutrallam: இரவு நேர சாரலால் ஆர்ப்பரித்த அருவிகள்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி