சிவகங்கை: சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்ந்து மறைந்த அரண்மனையில் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை, நடன, நாடகம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
வெள்ளையர்களை வென்று மீண்டும் தனது நாட்டை மீட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கைப்பயணம் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இசை, நடன, நாடகத்தினை அண்மையில் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள அந்த இசை நடன நாடகத்தினை நடத்தி வந்தனர்.
அதன் நிறைவு விழா வீரமங்கை வேலுநாச்சியாரின் சொந்த மண்ணான சிவகங்கையில் அவர் வாழ்ந்து மறைந்த அரண்மனை வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்றது.
வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து துவம்சம் செய்த காட்சிகளை இளைய தலைமுறையினரான எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டும் சுதந்திரப் போராட்டத்தில் வீரப்பெண்மணியாக திகழ்ந்து, அனைத்துப் பெண்களுக்கும் முன்னோடியாக வேலுநாச்சியார் விளங்கியதை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழைப் பறைசாற்றுகின்ற வகையில், நடத்தப்படும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தினை சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..