சிவகங்கை: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில், வைகாசி விசாக பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு உடல் முழுக்க கருப்பு சாயம் பூசி திகிலூட்டும் உருவம் மற்றும் மிரட்டும் கழுவனை, விரட்டி திகிலூட்டும் கழுவன் திருவிழாவில் உற்சாகமடைந்த இளைஞர்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதொரு காலங்களில், நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண சமயத்தை ஆதரித்தார். அப்பொழுது பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைப்பிடித்தார்கள். பாண்டிய மகாராணி அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தால் நெருப்பு வைத்துள்ளனர். இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டிய மன்னன் மீது கடும் கோபம் கொள்கிறார். இதன் காரணமாக பாண்டிய மன்னன் வெப்பு நோயால் பாதிக்கப்படுகிறார். சமணர்கள் பெரிதளவில் முயன்றும் பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்த முடியவில்லை.
இதனால் பெரிதும் கவலைநிலையுடன் மகாராணி பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்த, திருஞான சம்பந்தரை அழைக்கிறார். மகாராணியின் அழைப்பை விடுத்து திருஞான சம்பந்தரும் திருநீற்று பதிகம் பாடி திருநீற்றை தந்து பாண்டிய மன்னனின் நோயை குணப்படுத்துகிறார். தீராத நோய் குணமாகியதால் மன்னன் சைவ சமயத்தை தழுவி பின்பற்றுகிறார். இதனால் கோபமுற்ற சமணர்கள் புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சைவர்களை அழைத்தனர்.
இதில் தோற்றால் மன்னன் தங்களை கழுவேற்றலாம் என்ற விதியுடன் நடைபெற்ற போட்டியில், சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து சென்றுள்ளன. திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்துள்ளன. இதனையடுத்து திருஞான சம்பந்தர் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த சமணர்களை கழுவேற்ற பாண்டிய மன்னன் ஆணையிட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. இந்த புராதனக் கதைகளை நினைவுகூறும் வகையில் இந்த கழுவன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ சேவுகப்பெருமாள் ஐயனார் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா, கடந்த ஜூன் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து ஆறாம் நாளான இன்று கொடூரு கழுவன் விரட்டும் விநோத திருவிழா நள்ளிரவில் 2.00 மணியளவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி முகத்தை மறைக்கும் ஜடா முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் ஜடா முடியால் ஆன ஆடை என கோரமான உருவத்தில், திகிலூட்டும் தீவட்டியுடன் உலாவந்த கழுவனை, விரட்டி பிடிக்கும் நிகழ்ச்சியில் மக்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
திகிலூட்டும் அலங்காரத்துடன் உடல் முழுவதும் கரி, ஆட்டு இரத்தம், ஆட்டுக் குடல்களுடன் திருக்கோயிலுக்குள் அழைத்து வந்து கருப்பன சுவாமியிடம் அருள்பெற்று ஸ்ரீசேவுகப்பெருமாள் சுவாமி எழுந்தருளி உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நாட்டார்கள் முன்னிலையில் பணிவுடன் தவழ்ந்து வந்த கழுவனை அங்கு குவிந்திருந்த பக்கதர்கள் கூட்டம் கைத்தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அங்கு திருக்கோயில் சார்பில் கழுவனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர். கழுவன் விரட்டும் நிகழ்ச்சியில் உற்சாகமடைந்த இளைஞர்கள் பட்டாளம் கழுவனை விரட்டுவதும், தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவதும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த விழாவை காண ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் கழுவனை விரட்டி மகிழ்வது இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.
இதையும் படிங்க: கும்பேஸ்வரன் கோயிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!