சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகப்பன். இவரது மகன் சந்தோஷ்குமார். செம்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவருக்கு புதிது புதிதாக எதாவது செய்ய வேண்டும் என்று சிறுவயது முதலே ஆசை இருந்து வந்துள்ளது. ஆனால் வறுமை காரணமாக அவரால் தனது கனவையும் லட்சியத்தையும் எட்ட முடியாமல் இருந்தார். எனினும் விடாமுயற்சியுடன் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஐந்து மீட்டர் தூரம் எடுக்கக்கூடிய எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷன் கண்டுபிடித்து சாதனை படைத்தார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இது சந்தோஷுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
இந்நிலையில், தற்பொழுது தமிழ் மீது கொண்ட பற்றால் நான்கு இன்ச் கொண்ட 1463 சாக்பீஸ்களின் மீது 133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளை எழுதி அவர் சாதனை படைத்துள்ளார். அதிகாரத்தின் தலைப்புகளை வண்ண சாக்பீஸ் மீதும், குறள்களை வெள்ளை சாக்பீஸ் மீதும் எழுதியுள்ளார். சாக்பீஸின் முன்பக்கம் குறளின் முதல் வரியும் பின்புறம் அடுத்த வரியும் வரும்படி எழுதி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதை எழுதுவதற்கு ஒரு நாளைக்கு 20 மணிநேரம் செலவிட்டதாகவும் இதை 8 நாட்களில் எழுதி முடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியை இதுவரை யாரும் செய்யாததால் சோழன் உலக சாதனை புத்தகம் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் சந்தோஷுக்கு அளித்து கௌரவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, புதிய உலக சாதனையாக 150 கி.மீ. தூரம் சைக்கிளில் கைவிட்டு ஓட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.