மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், இளையான்குடி மற்றும் சாலைக்கிராம நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் உரிய அனுமதியின்றி, சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக் கம்பங்கள், கல்வெட்டுச் சுவர்கள், போஸ்டர்கள், இரும்பிலான தற்காலிக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மற்றும் காவல் துறையின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர், போஸ்டர், கொடிக் கம்பங்களால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாவும், சாலையின் இரு புறமும் வைக்கப்பட்டுள்ள போஸ்டர், பேனர்களால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்வதாகவும், அதிகளவில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட சாதி மற்றும் சமுதாயம் சார்ந்த கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், போஸ்டர்களை துரித நடவடிக்கையின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் மட்டும் பேனர், கொடிக் கம்பங்கள் உள்ளதாக கூறிய எதிர்தரப்பு வழக்கறிஞர், மனுவில் மாவட்டம் முழுவதும் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், அரசு நிலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சாதி சங்கங்களின் கட்சிக் கொடிகள், பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மலேரியாவுக்கு 63 ஆயிரம் பேர் பலி : WHO அதிர்ச்சி தகவல்....