சிவகங்கை: மானாமதுரை அண்ணாநகர் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் 95-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களைக் காலி செய்யச் சொல்லி ரயில்வே நிர்வாகம் வற்புறுத்தி வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் அங்கு வாழும் மக்கள் திரண்டு வந்து பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மானாமதுரை அண்ணாநகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக 95 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி தலித் விடுதலை இயக்கமும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
ரயில்வே நிலத்தில் வாழ்ந்து வரும் இந்த மக்களுக்கு குத்தகை ஒப்பந்தம் அளிக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் அதே இடத்தில் குடியிருப்பதற்கான வாய்ப்பை ரயில்வே நிர்வாகமும், மத்திய, மாநில அரசுகளும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
அந்தப் பகுதியில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன. அவற்றையும் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அம்மக்களின் வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வலியுறுத்துகிறோம்.
இலவச வீட்டுமனைப் பட்டாவோ அல்லது 99 ஆண்டுகளுக்கு குத்தகையாகவோ வழங்க வேண்டுகிறோம். எங்களின் இந்த கோரிக்கை மறுக்கப்படுமானால் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் மக்கள் போராட்டத்தையும் முன்னெடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ரூ.1.80 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைத் திருடி விற்க முயற்சி; நாடகமாடி பிடித்த போலீசார்