சிவகங்கை: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, +1 தேர்ச்சி பெற்று தற்போது +2 படித்துக் கொண்டிருந்த மாணவனை திடீரென அரசு பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படும் சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
V.மலம்பட்டி அருகே சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பு வரை மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். இதன் பின்னர், 2020-ல் V.மலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார். இதைத்தொடர்ந்து, மே 2022-ல் பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதிய போது கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக, ஆகஸ்டு 22-ல் மீண்டும் தேர்வு எழுதி இரண்டு படங்களில் மட்டும் வெற்றி பெற்று உள்ளார். அறிவியல் பாடத்தில் கருத்தியல் (THEORY) பாடத்தில் 15 மதிப்பெண், செய்முறை (PRACTICAL) தேர்வில் 25 மதிப்பெண் எனப் பெற்றுள்ளார். 40 மதிப்பென் பெற்றாலும் THEORY-யில் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் 15 பெற்றதால், அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது.
40 மதிப்பெண் பெற்றதால் தேர்ச்சி பெற்றதாக நினைத்து ஆகஸ்ட் 2022-ல் V.மலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இதற்கிடையே, அப்பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் இம்மாணவனுக்கு அட்மிஷன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 2023 மார்ச் மாதத்தில் +1 தேர்வு எழுதி 254/600 மதிப்பெண் பெற்று +1 தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்போது, +2 காலாண்டு தேர்வு எழுதி முடித்து அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில், +2 பொதுத்தேர்வுக்காக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் போது, இம்மாணவன் பத்தாம் வகுப்பிலே தேர்ச்சி பெறாதது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோரை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு மாணவனை பள்ளியில் இருந்து வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.
இதனால், படிப்பறிவு இல்லாத பெற்றோரும் செய்வது அறியாமல் புலம்பி வருகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று முன்னதாகவே தெரிவித்து மாணவனுக்கு நல்வழி காட்டாமல், மோசடி செய்து விட்டதாக கூறியதாலும் அவரது பெற்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம், தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளியில் எப்படி சேர்த்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், "ஆன்லைன் மூலமாக மதிப்பெண் சான்று ஜெராக்ஸ் கொண்டு வந்ததால் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. SSLC முடிக்காமல் மாணவர் HSC சேர்ந்து +1 முடித்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு அட்மிஷன் இருந்தால் மட்டும் போதுமென சில பள்ளி நிர்வாகங்கள் எண்ணுவதால், அவ்வப்போது இத்தகைய கவனக்குறைவான செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் செய்யும் தவறினால் பாதிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலம் தான் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அரியலூர் அருகே அச்சத்துடன் பயிலும் பள்ளி மாணவர்கள்.. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பெற்றோர் வேண்டுகோள்!