சிவகங்கை: மதுபோதையில் பொதுமக்களிடம் ஒருவர் தகராறு செய்வதாக பூவந்தி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பூவந்தி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பரமசிவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அங்கு தகராறில் ஈடுபட்டிருந்தது கீழப்பூவந்தியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கண்டித்து அனுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, நேற்று பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்ஐ பரமசிவத்திடம் தகராறு செய்ததுடன் அவரை தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்துப்பாண்டி இளையான்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதுமட்டும் இல்லாமல் ஏற்கெனவே குடிபோதையில் உயர் அலுவலர்களை தரக்குறைவாகப் பேசியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பணிக்குச் செல்லாமல் உள்ளதால் அவருக்கு உயர் அலுவலர்கள் ஆப்சென்ட் போட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மஞ்சுவிரட்டுப்போட்டி: மாடுகள் முட்டியதில் 15-ற்கும் மேற்பட்டவர்கள் காயம்!