சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இங்கு 300 படுக்கைப்பிரிவு, 500 படுக்கைப்பிரிவு, விபத்து அவசர சிகிச்சைப்பிரிவு, ஒருங்கிணைந்த தாய்,சேய் நல சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு எனப்பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினசரி புற நோயாளிகளாக 2ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 1200க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைப் பெற்றுச்செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள 300 படுக்கையறை பிரிவில் உள்ள ஐ.சி.யூ வார்டில் துப்புரவுப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையில் இதேபோல் பல பிரிவுகளிலும் மருத்துவப்பணியாளர்கள் பார்க்கும் வேலையை துப்புரவுப்பணியாளர்களே மேற்கொண்டு வருவதாகவும், விபரீதம் ஏதுவும் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச்சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை சுத்தம் செய்ய மட்டுமே துப்புரவுப்பணியாளர்களை பயன்படுத்துவதாகவும் கூறினார்.
மேலும் அவர்கள் எதுவும் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், மருத்துவக் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுவதாகவும் அவர்கள் குறித்து புகார் அளிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் கொலை வழக்கு... இருவர் கைது