சிவகங்கை: உலகப் பொதுமறையாகவும் தமிழரின் வாழ்வியல் நூலாகவும் கருதப்படுகிற திருக்குறளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகளில் உலகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட திருக்குறள் செயல்பாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து உலக திருக்குறள் கூட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. அவ்வகையில் சிவகங்கை மாவட்டத்தை இரண்டு பகுதிகளாக, பிரித்து வடக்கு மாவட்டமாக காரைக்குடியையும் தெற்கு மாவட்டமாக சிவகங்கையையும் செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாவட்டச் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை தெற்கு மாவட்டச் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கூட்டம் சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சொ. பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி ஆறு.மெய்யாண்டவர், சிவகங்கை தேசிய நல்லாசிரியர் செ.கண்ணப்பன், முன்னிலை வகித்தனர். காசி.இராமமூர்த்தி வரவேற்றார். புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார்.
பின்னர் செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மதிப்புறு தலைவராக சொ.பகீரத நாச்சியப்பன், மாவட்டத் தலைவராக சுந்தரமாணிக்கம், மாவட்டச் செயலாளராக புலவர் கா.காளிராசா, மாவட்டப் பொருளாளராக தமிழாசிரியர் ச.செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவராக முருகானந்தம், இணைச் செயலராக கவிஞர் சரண்யா ஆகியோருடன் இலக்கிய அணி, கலைத்துறை அமைப்பாளர், சுற்றுச்சூழல் துறை, மகளிர் செயல்பாட்டுத் துறை, திருக்குறள் பள்ளி அமைப்பாளர், இளைஞர் அணி, திருக்குறள் கரண ஆசான் உள்ளிட்ட பதினைந்து பொறுப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் வழி திருக்குறள் பள்ளிகளை அமைத்தல், தமிழர் வாழ்வியல் சார்ந்த விழாக்களில் திருக்குறளை முழங்கி விழாக்களை நடத்துதல், பொதுமக்கள் இளைஞர்களிடையே திருக்குறளை கொண்டு சேர்த்தல், மாணவர்களை 1330 திருக்குறளையும் மனனம் செய்ய வைத்து தமிழக அரசின் பரிசு பெறுதல், போன்ற செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பெறும். தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களை பட்டிமன்ற நடுவர் அன்புத் துரை, ஆசிரியர் வே.மாரியப்பன், ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி முத்து காமாட்சி, மருத்துவத்துறை ரமேஷ் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்களிடையே திருக்குறள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிவகங்கை நகரில் அரசின் அனுமதி பெற்று திருவள்ளுவருக்கு சிலை நிறுவுதல், சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை தொடங்குதல் முதலிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் கலைமகள் முத்துகிருஷ்ணன், சிவகங்கை தமிழ்ச் சங்க செயலாளர் இராமச்சந்திரன், அரசுத்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் மகேந்திரன், இளங்கோவன், புத்தகக் கடை முருகன், ட்ரெண்டிங் சிவகங்கை ஹரி, கவிஞர் சுப்பையா, தலைமை ஆசிரியர் தாமஸ், தமிழாசிரியர்கள் இந்திரா காந்தி, காதம்பரி, சகுபர் நிஷா பேகம், சமூக செயல்பாட்டாளர்கள் வித்தியா கணபதி, சரளா கணேஷ், ஆசிரியர் மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சிவகங்கை அரசு பள்ளிக்கு ரூ.1.30 கோடி உதவி.. அள்ளிக்கொடுத்த தொழிலதிபருக்கு குவியும் வாழ்த்து!