சிவகங்கை: ஐப்பசி மாதம் என்றாலே பலகாரம், பட்டாசு என நாடு முழுவதும் தீபாவளி களை கட்டத் தொடங்கி விடும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்டிகை தீபாவளி. நாடு முழுவதும் நேற்று (நவ.4) தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், 13 கிராமங்களில் சிறு வெடிச்சத்தம் கூட கேட்டக்கவில்லை.
இந்த 13 கிராமங்களில், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி புறக்கணிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை மட்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளி புறக்கணிப்பும், அதன் காரணமும்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாம்பட்டியை தலைமையாக கொண்ட இந்த 13 கிராமத்தினர், 1954 முதல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. தீபாவளியன்று இக்கிராமங்களில் பலகார மணம் வீசாது, பட்டாசு சத்தம் கேட்காது, புத்தாடை உடுத்திய எவரையும் காண முடியாது.
தீபாவளிக்கென எந்த அறி குறியும் இல்லாமல், வழக்கம் போல் தெருக்களில் விளையாடும் சிறுவர்கள், வயலுக்கு செல்லும் விவசாயிகள், மரத்தடியில் கதைக்கும் முதியோர்கள், ஆகிய காட்சியை தான் காண முடியும்.
அந்தக்காலத்தில், வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்த இவர்கள், அறுவடைக்குப் பின் கடனை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். விவசாய பணிகள் நடைபெறும் அதே காலகட்டத்தில் தீபாவளி வருவதால் அப்பண்டிகைக்கும் கடன் வாங்கி, இரண்டு கடனையும் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இதற்கு முடிவு கட்டும் விதமாக கிராமத் தலைவர் பெரி சேவகன் தலைமையில் மக்கள் கூடி, விவசாயப் பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடாமல், அறுவடைக்கு பின் வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்தனர்.
அன்று முதல் இக்கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. இதனால் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடினாலும் இங்கு மட்டும் அதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்து வருகிறது.
எவ்வித சங்கடமும் இல்லை
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “சென்ற 50, 60 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிராம மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்தனர். வறுமையில் வாடிய அவர்கள், மீண்டும் மீண்டும் கடன் வாங்கி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளனர்.
நாளடைவில் பலர் நல்ல வசதியாக இருந்தாலும், கட்டுப்பாட்டை மீறாமல் கடைபிடித்து வருகின்றனர். இதனால் இது வரை தீபாவளியை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
வெளியூரில் இருந்து இந்த கிராமங்களுக்கு திருமணம் முடித்து வரும் பெண்கள், இங்கு வந்ததும் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். இங்கிருந்து வெளியூருக்கு திருமணம் முடித்து செல்லும் பெண்கள் அங்குள்ள நடைமுறைப்படி கொண்டாடுவர்கள். ஒட்டு மொத்த கிராமத்திற்கும் இது தான் கட்டுப்பாடு என்பதால் எங்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாது.
எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக வெளியூர்களில் வசித்தாலும், அங்கும் இப்பண்டிகையை கொண்டாட மாட்டார்கள். ஊரில் உள்ளவர்கள் தீபாவளியன்று வயல் வேலைகளுக்கு சென்று விடுவோம்” என்றனர்.
இதையும் படிங்க: தமிழ் மன்னன் நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடக்கூடாது - கு.ராமகிருட்டிணன்