சிவகங்கை: காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் பீமா நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் சிலர் தாங்கள் நடத்திவரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், நிலம் வாங்கித் தரப்படும் எனக் கூறி அணுகியுள்ளனர்.
இதனை நம்பிய ஹேமலதா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். மேலும் அவரது உறவினர்கள், தெரிந்தவர்கள் என சுமார் 100 பேர் ரூ. 12 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 700 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்நிறுவனம் சார்பில் கொடுத்த காசோலைகள் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமலதா சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் பாபு, சாகுல் ஹமீது, அறிவுமணி, ராஜப்பா உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விவகாரத்தில் விசாரணைக்குப் பின்பே முழுமையான விவரம் தெரிய வரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிறுவனத்தினர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் காப்பகம்: பாகனை கொன்ற யானை கரேலில் அடைப்பு