சிவகங்கை: திருப்பத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் எம்.ஆர். பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவிற்கு வருகைதந்த பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த பிரேமலதா பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. ஆட்சி பலம், அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தனியாகப் போட்டியிடுகிறோம்.
பெரிய ஆதரவு எங்களுக்கும், கேப்டன் விஜயகாந்திற்கும் எங்கள் கட்சி வேட்பாளருக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகியும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது.
கேட்டால் உறுதியான பதில் எதுவும் இல்லை கூறாமல், சிரித்து மழுப்புகின்றனர். நீட் விவகாரத்தை வைத்து திமுகவும், அதிமுகவும் அரசியல் செய்கிறார்கள். மக்களை குழப்புவதற்கும், அரசியல் ஆக்குவதற்கும் நீட் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் தேமுதிகவின் ஆதரவு அந்தப் பெண்ணிற்கு உண்டு, இருந்தாலும் கல்வி பயிலும் இடத்தில் மதம் வேண்டாம் என்பது எங்களது நிலைப்பாடு" என்றார்.
இந்தியாவுக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது பற்றி கேட்டதற்கு, "சொல்றவங்க, எல்லாம் யார் என்றால் வாரிசு இல்லாதவர்கள்தான் இதைப் பற்றி பேசுகிறார்கள். திருமணமாகாதவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள்தான் இதைப் பற்றி பேசுகிறார்கள். பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது" என்றார்.
மக்கள் ஏற்றுக் கொண்டவர்களை வாரிசுதாரர், வாரிசு அரசியல் என்று கூறக்கூடாது எனவும், கீழடியை மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா தலமாக்கி நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் அடையாளமாகக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.
பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்குதான் வாய்ப்புகள் அதிகம், தற்போது அந்த நிலை மாறுமா என கேட்டபோது வாய்ப்பில்லை என்றார். ஆட்சி பலம் அதிகார பலம் பண பலம் தான் இன்றைய அரசியல் நிலைமை என்றாகிவிட்டது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசின் கஜானாவை காலி செய்ததுதான் அதிமுகவின் சாதனை - கனிமொழி பேச்சு