சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினோதினி(30). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று (மே. 3) வினோதினி முறையூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோயிலாப்பட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இருவர் வினோதினியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதில், நிலைதடுமாறி வினோதினி மற்றும் வழிப்பறி திருடர்களும் கீழே விழுந்தனர். பின் வினோதினி திருடன் திருடன் என்று கத்திய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதில் ஒருவரை பிடிபட்டான், வாகனத்தை ஓட்டி வந்த மற்றாருவர் தப்பிச் சென்றார்.
தகவலறிந்து விரைந்து வந்த எஸ்.வி.மங்களம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், பிடிபட்டவன் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்துறைையச் சேர்ந்த சேதுபதி(34) என்பதும், தப்பி ஓடியவர் சிங்கம்புணரி கக்கன்ஜி ராஜபாண்டி (28) என்பதும் இருவரும் ஏற்கனவே பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சேதுபதியை காவல் துறையினர் கைது செய்து தப்பிச் சென்ற ராஜபாண்டியை தேடி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் சிங்கம்புணரியில் மூதாட்டியின் காதை அருத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது சிங்கம்புணரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.