சிவகங்கை: ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழை விவசாயி பாக்கியம் என்பவரின் மகன் லிங்கராஜா. சிறு வயதில், கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு இவர், முழுநேரமும் அதற்காக தண்ணை அர்பணித்து விளையாடி வந்தார். இந்நிலையில், சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஒரு கை முறிவு ஏற்பட்டது.
லிங்கராஜாக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினால், தொடர்ந்து தனது ஒற்றை கையால் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெற்று சிறப்பாக ஐந்து ஆண்டுகள் பேட்டிங், பௌலிங் இந்த இரண்டிலும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
இந்திய அணியில் விளையாட சிவகங்கை லிங்கராஜாவுடன் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ், திருப்பூர் மணிவண்ணனும் தேர்வாகியுள்ளார்கள். லிங்கராஜா தற்போது தனது பயிற்சியை மதுரையில் மேற்கொண்டு வருகிறார். இந்திய திவ்யாங் கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் திவ்யாங் கிரிக்கெட் அணிக்கு இடையிலான மூன்று சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் ராஞ்சி மெக்கான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் விளையாட சிவகங்கை லிங்க ராஜா தேர்வு செய்யப்பட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக விளையாட உள்ளார். இந்த போட்டியினை தொடர்ந்து வாரணாசியில் 24ஆம் தேதி ஒரு சர்வதேச போட்டியில் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் லக்னோவில் நடைபெற உள்ள முதல் மாற்றுத்திறனாளிகள் டெஸ்ட் போட்டியிலும் இவர் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வீரர்களின் தலைமை தேர்வாளர் ஆசிஷ் ஸ்ரீ வஸ்தவால் மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டிகளில் இவர் பங்கேற்க தற்போது இவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயண செலவுகளுக்கு தேவையான பணம் இவரிடம் இல்லாமல் இருப்பதால் தற்போது இவரின் கிரிக்கெட் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.
இது சம்பந்தமாக தனக்கு உதவ வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றார். இந்திய அணிக்காக விளையாட செல்ல உள்ள லிங்க ராஜாவுக்கு, மாவட்ட நிர்வாகம் உதவி செய்து இவரின் கிரிக்கெட் விளையாட்டின் கனவை நினைவாக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து லிங்கராஜா கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இந்த மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அமைப்பை விரைவில் இணைப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி எங்கள் அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைத்தாள் என்னை போன்ற வீரர்கள் ஒவ்வொரு முறையும் நாங்கள் போட்டிக்கு செல்லும் போது பிறரை எதிர்நோக்கி செல்லும் இந்த அவல நிலை எங்களுக்கு ஏற்படாது எங்கள் திறமையை வெளி கொண்டுவர விரைவில் இந்த இணைப்பை செயல்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வு