சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஊர்ப்பகுதி பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ”காரைக்குடி-மேலூர் இடையிலான நான்கு வழிச்சாலையில் புறவழிச்சாலை அமைக்க முடிவானது. இதற்காக பாதரக்குடி கிராமத்தில் கண்மாய் பகுதி, நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்புகளும் இடிபடும் வகையிலும், ஒட்டுமொத்த ஊரையும் மூன்று பகுதியாக பிரிக்கும் வகையில் திட்டம் இருந்தது.
இதனால், கிராம மக்கள் பாதிப்பதை தவிர்க்கும் வகையிலும், நீர் நிலையோ, குடியிருப்போ, ஊரின் மையப்பகுதிக்குள் புறவழிச் சாலை அமைந்திடாத வகையில் 3 மாற்று வழித்தடங்களின் மாதிரி கிராமத்தினர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதில், 2 மாற்றுப் பாதையை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆனால், குடியிருப்புகளும், நீர் நிலைகளும் பாதிக்கும் வகையில் திட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக தெரிகிறது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு கிராமமும், குடியிருப்புகளும், நீர் நிலைகளும் பாதிக்காத வகையில் ஆய்வு செய்த இரண்டு மாற்று வழித்தடங்களில் ஏதாவது ஒன்றில் புறவழிச்சாலை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் ஒன்பதாம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நடைபாதை ஆக்கிரமிப்பு- போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள்