சிவகங்கை: மானாமதுரை கிருஷ்ணாரஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செர்டு பாண்டி. இவரது மகள் பார்கவி உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்துவருகிறார்.
இந்நிலையில் ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் காரணமாக அங்குப் படிக்கும் இந்திய மாணவிகளை மீட்டுவர வேண்டும் என அவர்களின் பெற்றோர்கள் இந்திய அரசிற்குக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள நிலைமை குறித்து உக்ரைன் நாட்டிலிருந்து மானாமதுரை மாணவி பார்கவி காணொலி அழைப்பு மூலம் கூறியதாவது, "தற்போதுவரை எந்தப் பிரச்சினையும் இங்கு இல்லை. நேற்று அதிகாலை பயங்கரமான சத்தம் கேட்டது.
எல்லையில் நடக்கும் போர் எனக் கேள்விப்பட்டோம். மேலும், இங்கு உணவு, நீர், ஆவணங்கள் ஆகியவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள உக்ரைன் அரசு கூறியுள்ளது.
இந்தப் பதற்றமான நிலையில் உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் எங்களை மீட்டு இந்தியா கொண்டுசேர்ப்பார்கள் என நம்புகின்றோம். மேலும், எங்களுக்கு உக்ரைன் ராணுவம் முழு பாதுகாப்பு வழங்கிவருகிறது" எனக் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து மாணவியின் தாய் போதும்பொன்னு, தங்கை தர்சிகா, "மத்திய மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய மாணவ மாணவிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர், தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும்பொருட்டு ஜெசிந்தா லாசரஸ் மாநிலத் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களையும், டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலர், உள்ளுறை ஆணையரத் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288, வாட்ஸ்அப் எண் 9289516716 மின்னஞ்சல் – ukrainetamils@gmail.com எனத் தமிழ்நாடும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிரமடையும் போர்... உக்ரைனில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மாணவர்கள்!