தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக ஆகிய கூட்டணி கட்சிகள் சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இருக்கட்சியினரும் அறிவித்துவிட்டனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 2 நாட்களாக யாரும் வராத நிலையில் மூன்றாவது நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர்களாவது வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர்களும் வரவில்லை.
இதனால் மூன்றாவது நாளாக இன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எந்தவித பரபரப்பும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தன் உறுதி செய்தார்.