சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று (ஜன.8) சந்தித்தார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல்களில் சர்வாதிகார பாஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
தற்போதைய ஆளுநர் அவரது பணியை முடிக்காததால் தண்டனைக்காகவே தமிழ்நாடு அனுப்பபட்டார். அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும் ராஜேந்திர பாலாஜி மோடிக்கு பிள்ளை. அதனாலேயே அவர் இத்தனை நாள்கள் காவல்துறையிடம் இருந்து காப்பாற்றப்பட்டார்.
நீட் தேர்வில் தமிழ் தேசியம் வேண்டாம்
மேலும், நீட் தேர்வு பிரச்சினையை உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும். மருத்துவக்கல்லூரிக்கு எவ்வாறு மாணவர்களை படிக்க அனுமதிக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக, தமிழ், தமிழ் தேசிய உணர்வு என்பதை தள்ளிவிட்டு பார்க்க வேண்டும்.
நீட் தேர்வையும் தமிழ் தேசியத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது. ஏற்கனவே, பழைய முறையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் போதும் அதிகளவில் செலவு செய்து படிக்க வைக்கப்படும் தனியார் பள்ளி மாணவர்களுக்கே அதிகம் இடம் கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிகம் இடம் கிடைக்கவில்லை.
ஸ்டாலின் பிரதமராகலாம்
அதன்பின், தமிழ்நாடு அரசு நுழைவு தேர்வை நடத்தியது. அதிலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் தேர்வானார்கள். தற்போது இந்த நீட் தேர்விலும் கிராம புற மாணவர்கள் தேர்வாகவில்லை. இட ஒதுக்கீடு மூலமாகவே அதிகமான அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
எனவே, அதற்கான மாற்று வழித் தேர்வு முறையை அரசு கண்டுபிடிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஆதரித்தால் மட்டுமே முடியும். ஒரே ஒரு மாநிலம் மட்டுமே தற்சமயம் ஆதரவு குரல் எழுப்பி வருகிறது. மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்ததே சரி. முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமராக விரும்புவதில் தவறில்லை" என்றார்.
இதையும் படிங்க: நீட்டுக்கு எதிரான தீர்மானம்: பாஜக தவிர ஏனைய கட்சிகள் ஆதரவு