தமிழ்நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக குடிமராமத்து செய்ய முதலமைச்சர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 4,446 சிறு பாசன குளங்கள், மற்றும் 4,325 பாசன ஊரணிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 1994 பாசன ஊரணிகள் மற்றும் 300 சிறு பாசன குளங்களை பொதுமக்கள் பங்களிப்புடன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள ஊரக வளர்ச்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது.
இதில் சிறு பாசன குளங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், சிறு பாசன ஊரணிகளுக்கு தலா 5 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக முடிகண்டம் கிராமத்தில் உள்ள சிறு பாசன குளத்தின் குடிமராமத்து பணிகளை காதி கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஜெயகாந்தன் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.