மத்திய அரசு மருத்துவர்களுக்கு நுழைவுத் தேர்வான நீட்-உடன் இறுதி ஆண்டு பயின்று மருத்துவர்களாக வெளியேறும்போது திறனறியும் என்ற நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அக்கல்லூரி மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இந்திய மருத்துவக் கழகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.