சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக, சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த 6ஆம் கட்ட அகழாய்வில் கீழடியுடன் சேர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகியப் பகுதிகள் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், கொந்தகைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் சங்க காலத்திற்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் எலும்புக்கூடுகள் ஆகியவை கண்டறியப்பட்டன.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கீழடி கொந்தகைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அகழாய்வுக் குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. அதை முழுவதும் சுத்தம் செய்தபிறகு, ஓரிரு நாட்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு