நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த விஜயதசமி நாளில் முதன்முறையாகப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை பெற்றோர் பள்ளியில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மேளம், நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை நிகழ்வு விழாவாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது நடராஜபுரம் காளியம்மன் கோயிலில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பின் மேளம், நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊர்வலமாக பள்ளியை அடைந்தனர்.
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தமிழ் துறைத் தலைவர் முனைவர். சபா. அருணாச்சலம், ஆசிரியர்கள் ஆகியோர் புதிதாய் சேர்ந்த மாணவர்களின் கையைப் பிடித்து, நெல்மணிகளில் ’அ’கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியைகள் புதிய மாணவர்களுக்கு திருக்குறளையும் அந்தாதியையும் சொல்ல வைத்தனர்.