சிவகங்கை: திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி ஊருக்குள் புகுந்த சிலர் , அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவரை படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளாக கருதப்படும் அக்னி, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.
இவ்வாறு இதில் இருவர் இறந்த நிலையிலும், ஒருவர் தலைமறைவான நிலையிலும் மற்றும் மூன்று பேர் சிறார் என்பதால் மற்ற 27 பேர் மீதான வழக்கு, சிவகங்கை ஒருஙகினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கின் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இதனால் அன்றைய தினம் காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றவாளிகளிடம் நீதிபதி முத்துக்குமரன் வழக்கு குறித்து விசாரணை செய்தார். பின்னர் சிவகங்கை நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி கருத்துக்களை கேட்ட பின்னர், வருகிற 5 ஆம் தேதி 27 பேரின் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, “கச்சநத்தம் படுகொலை வழக்கில் குற்றவாளிகல் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் உத்தரவிட்டார்.
இதில் சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னி ராஜ், ராஜேஸ்வரன், இளையராஜா, கனித் என்ற கனித்குமார், கருப்பு ராஜா என்ற முனியாண்டி சாமி, மைக்கேல் முனியாண்டி, ஒட்டகுலத்தான் என்ற முனியாண்டி, ராமகிருஷ்ணன், மீனாட்சி, செல்வி, கருப்பையா, சுரேஷ்குமார், சின்னு, செல்லம்மாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முத்தையா என்ற முத்து சேர்வை, முத்துச்செல்வம், முத்தீஸ்வரன் என்ற முத்து முனீஸ்வரன், ராமச்சந்திரன், சுள்ளான் கருப்பையா, மாயச்சாமி, பிரசாத் என்ற அருண்பாண்டி (உயிரிழந்தவர்), ரவி என்ற முகிலன், ரவி, அருள் நவீன், தவிடு என்ற கார்த்திக் மற்றும் மட்டி வாயன் என்ற முத்துமணி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.