சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து அகழாய்வுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கீழடி அகழாய்வுப் பணிக்காக தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தை வழங்கிய உள்ளூரைச் சேர்ந்த முனைவர் கதிரேசன் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்தார். அதில், "கடந்த ஐந்தாண்டுகளாக கீழடியின் பெருமை உலகளவில் தெரியத் தொடங்கியுள்ளது. பண்டையத் தமிழர்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கும் முன்பாக இங்கே வாழ்ந்துள்ளனர்.
தமிழர்களின் நாகரிகம் குறித்து உலகெங்கும் வாழ்கின்ற மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். பண்டையத் தமிழர்கள் பயன்படுத்தியப் பொருட்கள் அகழாய்வில் கிடைப்பது குறித்து மண்ணின் மைந்தனாகவும், அந்த நிலத்துக்குச் சொந்தக்காரனாகவும் மிகவும் பெருமை கொள்கிறேன்.
நாங்கள் வழங்கியுள்ள இந்த நிலம் அடர்ந்த தென்னந்தோப்பாகும். மரங்களில் ஓரிரண்டு சேதமானாலும் பரவாயில்லை. தமிழர்கள் குறித்த பெருமை வெளியுலகிற்குத் தெரிய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். கீழடியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் எங்களது குடும்பம் சார்ந்த பல்வேறு உறுப்பினர்கள் நிலம் வழங்கியுள்ளோம்.
இவையனைத்தும் வெற்றிடங்களாகக் கிடந்தன. தற்போது தென்னந்தோப்பாக இருந்தபோதும் கூட ஆய்வுக்கு வழங்கியுள்ளோம். அதனை எங்களது கடமையாகவே எண்ணுகிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குரூப் 4, குரூப் 2ஏ பணிக்கு இனி 2 எழுத்துத் தேர்வுகள்!