சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து 2017 முதல் 2019 வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தொடர்ந்து தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடி உடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கொந்தகையில் நடைபெற்றுவந்த அகழாய்வுப் பணியின்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழடி மற்றும் கொந்தகை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக நிறைந்திருந்தன. அவற்றையெல்லாம் வெளியேற்றி இன்று 18 பணியாளர்களுடன் பணிகள் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: உபி.க்குத் திரும்பும் குடிபெயர்ந்தோரில் 22 விழுக்காட்டினருக்கு கரோனா!