சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கிய அகழாய்வுப் பணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பரிமாணம் பெற்று, சற்றேறக்குறைய 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் என்ற பழமையான தொல்லியல் மேடு என்ற பெருமையையும் படைத்துள்ளது.
5ஆம் கட்ட அகழாய்வுக்குப் பிறகு, 6ஆம் கட்ட அகழாய்வில், இறந்தவர்களைப் புதைப்பதற்காக உள்ள பழங்கால இடுகாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு முன்பாக ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட தொல்லியல் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக கீழடியில் முதல்முறையாக ஈமக்காடு என்றழைக்கப்படுகின்ற பண்டைய இடுகாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் உதவி இயக்குநர் சிவானந்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்காக அளித்த சிறப்புப் பேட்டியில், "கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் பகுதிகளில் சங்க காலத் தொல்லியல் மேடு பரவி கிடக்கிறது. இவையனைத்திலும் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த ஆய்வின் முடிவில்தான் இப்பகுதியில் நிலவிய பண்பாட்டின் முழு பரிமாணத்தையும் உணர முடியும். அதனை அடிப்படையாகக் கொண்டே 6ஆம் கட்ட அகழாய்வில் மேற்கண்ட நான்கு இடங்களையும் தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், இங்கு தொழிற்கூடங்கள் இருந்ததாக ஆய்வாளர்களிடையே கருதுகோள் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது. 6ஆம் கட்டத்தில் இடம்பெற்றுள்ள கொந்தகையில், இறந்தோரைப் புதைக்கும் ஈமக் காட்டினையும் முதல் முதலாக அகழாய்வு செய்யவுள்ளோம். தற்போதுள்ள வாழ்விடப்பகுதியில் வாழ்ந்த மக்களின் ஈமக்காடாக ஒரு காலத்தில் கொந்தகை திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
6ஆம் கட்டத்தில் இடம் பெறவுள்ள நான்கு இடங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் இந்தப் பகுதியில் வாழ்ந்த நகர சமுதாயமானது தொழிற்கூடம், வாழ்விடப் பகுதி, ஈமக்காடு உள்ளிட்டவற்றில் என்னென்ன பொருட்கள் இருந்தன? எத்தகைய பண்பாட்டைக் கொண்டு வாழ்ந்தனர் என்பதை உணர வாய்ப்புண்டு.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கின்ற ஆய்வுப் பணிகளில் அதுபோன்ற தொல்லியல் சின்னங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கும் என நம்புகிறோம். நில உரிமையாளர்கள் ஆர்வமாக தங்களது நிலங்களை ஆய்வுக்காக வழங்கியுள்ளனர்.
அகழாய்வு மேற்கொள்வதற்கான குழிகளின் எண்ணிக்கையைப் இப்போதே கூற முடியாது. நான்கும் வெவ்வேறு பகுதிகள் என்பதால், அவ்விடத்தில் கிடைக்கும் தொல்லியல் சின்னங்கள், கட்டுமானங்களைப் பொறுத்து குழிகளின் எண்ணிக்கை அமையும். தோராயமாக நாற்பதிலிருந்து 60 குழிகள் வரை தோண்ட வாய்ப்புள்ளது.
சிந்து சமவெளியில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புகள், குறியீடுகள், தமிழி எழுத்துகள் ஆகிய மூன்றும் ஒரு சேர தொடர்ந்து கிடைப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணி: தொடங்கிவைக்கும் முதலமைச்சர்!