சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டதில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கிடைத்தன. 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை இங்கே மேற்கொண்டது.
பிறகு 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. இதில், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர், வடிகால் அமைப்புகள், உறைகிணறு, சுதை சிற்பங்கள் (சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்), விளையாட்டு பொருள்கள், காதணிகள், அரசு முத்திரை, பானை ஓடுகள், இரும்பு, செப்புக்காசுகள், முத்து, பவளம் உள்ளிட்ட பழமையான பொருள்கள் கிடைக்கப் பெற்றன.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டதைத் தொடர்ந்து கீழடி நாகரிகம் உலகம் முழுவதும் பரவியது. தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்த நிலையில், இதற்காகத் தமிழ்நாடு அரசு 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று தொடங்கவுள்ள ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.
ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு இடம் வழங்கிய மாரியம்மாள் என்பவரின் நிலத்தின் அருகிலுள்ள கதிரேசன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் முன்னிலையில் நடைபெற்றன. தொல்லியல் துறையினர், ஊழியர்கள் தங்குவதற்கு கருப்பையா என்பவரது நிலத்தில் முகாம் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்கள் திருப்பூரில் கைது!