சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர்.
கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7ஆம் கட்ட அகழாய்வுப் பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டன.
இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய கால மக்கள் பயன்படுத்தியது என்பது அறியப்பட்டுள்ளநிலையில் கீழடியில் பழங்கால நகர நாகரிக மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொய்வு
நடந்து முடிந்த ஏழாம் கட்ட அகழாய்வு குழிகள் மற்றும் ஏழு கட்டங்களில் கண்டறியப்பட்ட பொருட்களையும் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக வைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அவற்றை காணத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினசரி ஆர்வத்துடன் பலர் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
காரணம் கண்டறியப்பட்ட எந்த ஒரு பொருட்களும் அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை. அத்துடன் 7ஆம் கட்ட ஆய்வில் தோண்டப்பட்ட குழிகளையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் கீழடியில் கட்டப்பட்டு வரும் மிகப்பிரமாண்டமான அருங்காட்சியகப்பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாகவும்; விரைவில் முடித்து அங்கு அனைத்துப்பொருட்களையும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது
அவ்வாறு விரைவில் அருங்காட்சியகம் திறக்கப்படும் பட்சத்தில் தென்னிந்தியாவின் மாபெரும் சுற்றுலாத்தலமாக கீழடி மாறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இதையும் படிங்க:பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்