காரைக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., பாஜக தேசிய செயலாளரும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஹெச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது ஹெச்.ராஜா கூறியதாவது, பொய்யின் ஒட்டுமொத்த உருவமாக நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் (ப.சிதம்பரம்) செயல்படுவதாக விமர்சித்தார். பொருளாதார மேதை என்று சொல்லிக்கொள்ளும் அந்த நபர், 2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மோடி ஆட்சிக்கு வந்தால் கண்மாய் வெட்டுவது நின்று போகும் என்று பேசியதாக குறிப்பிட்ட ஹெச்.ராஜா, அப்படி எல்லாம் நடக்காது என்று தான் கூறி வருகிறேன் என்றார்.
மாநிலம் முழுவதும் 50 விழுக்காடு வாக்குகளை பெற்று அதிமுக கூட்டணி 40 க்கு 40 வெற்றி பெறுவதில் சந்தேகமேயில்லை என தெரிவித்த ஹெச்.ராஜா, பாஜக விருப்பமே கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் இடம் பெற வைப்பதுதான் என்றார்.
இதனால் மத்திய அமைச்சரவையில் கூடுதலாக தமிழ்நாடு அமைச்சர்கள் இடம் பெற வாய்ப்பு ஏற்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். கூட்டணி என்பது கணவன்-மனைவி போல இணக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.