சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், சுபிக்ஷா (15), சுமன் (12) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
மதுரை நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற சுபிக்ஷா, இந்தாண்டு 10ஆம் வகுப்பு செல்ல உள்ளார். இவர் தனது ஊரிலிருந்து மதுரையிலுள்ள பள்ளிக்கு நாள்தோறும் சென்று வந்தார்.
இதையடுத்து தன்னுடைய பள்ளியின் சார்பாக பல்வேறு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வாங்கி குவித்துள்ள சுபிக்ஷா, அண்மையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசு பெற்றார்.
இதைத்தொடர்ந்து கரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பில் கற்று வந்த மாணவி சுபிக்ஷா, அந்தப் பாடங்கள் புரியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் தனது மதிப்பெண் பாதிக்கப்படும் என்றும் அவர் மிகவும் கவலையோடு இருந்திருக்கிறார்.
இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த சுபிக்ஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் வழியே தேர்வா..? - காமராஜர் பல்கலைக் கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்