சிவகங்கை: மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களைக் காக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 11ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கும் ஒன்றிய அரசு, ஏழை தமிழ்நாடு மீனவர்களின் குடும்பங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுக்கு நிதி உதவி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மீனவர்கள் அச்சுறுத்தல் இல்லாமல் மீன் பிடிக்க இலங்கை அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், ஒன்றிய அரசு மனது வைத்தால் மட்டுமே தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். தினம் தினம் விலையேற்றத்தை அறிவிக்கும் எண்ணெய் நிறுவனங்களை தன் கட்டுக்குள் வைத்து அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் கடமை.
சொத்து வரி உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில், முதலமைச்சரிடம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்” என்றார். மேலும், தங்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது குறித்த கேள்விக்கு,
’சுமார் ஆயிரத்து 300 உறுப்பினர்கள் ஆதரவுடன் நான் வெளிப்படைத் தன்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தேர்தலில் சீட்டு கிடைக்காத சிலர் தவறான பரப்புரை செய்கிறார்கள். அவர்கள் மேல் கட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது’ என பதிலளித்தார்.
இதையும் படிங்க: புதிய அணை கட்ட இடமில்லை - துரைமுருகன்