புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரமேஷ்(41). இவர் அப்பகுதியில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தாளாளராக இருக்கிறார். இவர் 2018ஆம் ஆண்டு பள்ளியின் விரிவாக்கத்துக்காக ரூ.18 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளார். இதனால், தனது நண்பர்கள் மூலம் பாகனேரியைச் சேர்ந்த காளையப்பன் என்பவரை சந்தித்துள்ளார். இந்நிலையில், பள்ளித் தாளாளர் ரமேஷிற்கு தொழில் அதிபர் ஒருவரிடம் கடன் வாங்கித் தருவதாகக் கூறிய காளையப்பன்(52) என்பவர், அவரிடம் 7 சதவீதம் கமிஷன் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரமேஷ் காளையப்பனுக்கு கமிஷன் தொகையாக ஒரு கோடியே 26 லட்ச ரூபாயை பல தவணைகளில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட காளையப்பன் பேசியபடி கடன் தொகையை வாங்கித் தராததோடு வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமேஷ் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரனிடம் புகார் அளித்தார்.
ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் காளையப்பன், ரமேஷின் நண்பர்கள் சண்முகநதான், ராமநாதன், சரவணன், காளையப்பன், அவரது மகன் ஐயப்பன்(26) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோசடி செய்தது உறுதியானதையடுத்து காளையப்பனையும், அவரது மகனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காளையப்பன், திரைப்பட வினியோகஸ்தராக இருப்பதாகவும், சமீபத்தில் இவர் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.