சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஜா. இவர் பத்து வருடங்களுக்கு முன் ரயில் விபத்தில் கால்களை இழந்தார். மாற்றுத் திறனாளியான சுபஜா, சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் அலுவகத்தின் எதிரே பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுத்து அதன் மூலம் வரும் வருமானம் மூலம் பிழைப்பு நடத்திவருகிறார்.
மாற்றுத்திறனாளியான சுபஜா கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை விடவில்லை. இவர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணியில் தொடர்ந்து விளையாடிவருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணி கோவையில் நடைபெற்ற போட்டியில் ஆறு பதக்கங்களை வென்று, பிகாரில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், சுபஜாவின் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சக்கரவண்டி உடைந்து போனது. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் பணமில்லாமல் தவித்துவந்துள்ளார். இது குறித்து சுபஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முகநூல் பக்கத்தின் மூலம் இதனையறிந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேரன் என்பவர் சுபஜாவிற்கு உதவ முன்வந்தார். சேரன் தனது முகநூல் நண்பர்களின் வாயிலாக ரூ. 23,590 நிதி திரட்டி அதனை சுபஜாவை நேரில் சந்தித்து வழங்கினார்.
மாற்றுத் திறனாளி ஒருவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க முகநூல் நண்பர் ஒருவர் உதவிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.