மானாமதுரை அமமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ், ஜயப்பன், பழனிக்குமார், பாலாஜி, தொத்தல் என்ற முத்து செல்வம் ஆகியோர் சிறையில் இருந்து வெளியாகவுள்ளனர்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான தங்கராஜின் அண்ணன் தங்கமணி என்பவர் மட்டும் ஜாமினில் வெளியில் உள்ளார். இவர் இன்று மானாமதுரையில் உள்ள கனரா வங்கிக்குச் சென்றபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றால் தங்கமணியை சரமாரியாக வெட்டினர்.
அப்போது, கனரா வங்கி காவலாளி செல்வநேரு என்பவர் கொலையாளிகளை தனது துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்செல்வம் என்பவர் காயமடைய, மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, சம்பவம் நடந்த கனரா வங்கிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து வங்கியின் பாதுகாவலர் செல்லநேருவிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை நான்கு தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகத் தெரிவித்தார்.