சிவகங்கை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்கு மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பிரதமர் உரையாற்றி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமர் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக உரையாடுவது நாட்டிற்கு மிக மிகக்கேடு விளைவிக்கக்கூடிய செயலாகும். இச்செயலுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது. விரைவில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்’ என்றார்.
33 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும்
மேலும், பெண்ணின் திருமண வயது 21 என உயர்த்திய மத்திய அரசின் செயல்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகத் தெரிவித்த முத்தரசன்; நாடாளுமன்றத்தில் எவர் தயவும் இன்றி சட்டங்களை நிறைவேற்றும் அளவிற்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றிய அரசு, பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வரும் நிலையில், இன்று வரை அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு குறித்த கேள்விக்கு, ஒரு அமைச்சருக்கு எத்தனை வீடு இருக்க வேண்டும், 69இடங்களில் ரெய்டு என்றால் ஆதாரம் இல்லாமல் யாரும் சோதனை செய்யமாட்டார்கள் என்றும்; வீடுகள் மட்டும் தான் பல உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பினார்.
ஒன்றிய அரசு ஆர்எஸ்எஸ்ஸின் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தும் அரசாகச் செயல்படுவதாகவும் சமூக விரோதிகளின் பெரும் கூடாரமாகப் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என்றும் முத்தரசன் வேதனைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கள்ளச்சாராயத்துக்கு கதர் வாரியம், கட்டப்பஞ்சாயத்துக்கு அறநிலை, நீர் தராதவருக்கு நீர்வளம்!'